×

சோழவந்தான் மாணிக்கத்துக்கு ‘‘மகத்தான’’ வரவேற்பு ரேஷனில் வழங்கிய புழுத்த அரிசியுடன் அதிமுக எம்எல்ஏவுக்கு ஆரத்தி: முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதத்தால் பரபரப்பு

அலங்காநல்லூர்: சோழவந்தான் அதிமுக எம்எல்ஏவுக்கு ரேஷனில் வழங்கப்பட்ட புழுத்துப்போன அரிசியுடன் பொதுமக்கள் ஆரத்தி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குமாரம் கிராமத்திலிருந்து, சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளரும், சிட்டிங் எம்எல்ஏவுமான மாணிக்கம் நேற்று பிரசாரம் துவங்கினார். சென்ற இடமெல்லாம் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தண்டலை ஊராட்சி செவக்காடு கிராமத்துக்கு சென்றபோது, கிராம மக்கள், பெண்கள், அவரிடம், ‘‘இங்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி சரியில்லை’’ என்று, திரண்டு வந்து புகார் தெரிவித்தனர்.

பின்னர் ஆரத்தி தட்டில், புழுத்துப்போன ரேஷன் அரிசியை வைத்து, எம்எல்ஏ மாணிக்கத்துக்கு ஆரத்தி எடுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தொகுதியில் கிராமங்களுக்கு சாலை, குடிநீர் வசதி செய்து தரவில்லையென புகார் கூறி எம்எல்ஏவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். எம்எல்ஏ சமாதானம் செய்ய முடியாத சூழலில், அங்கிருந்து அவசரமாக கிளம்பி சென்றார். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்கூறும்போது, ‘‘கடந்த 5 ஆண்டுகளாக ரேஷன் கடையில் புழுத்துப்போன அரிசியைத்தான் வழங்கினர். கடையில் போய் கேட்டால், ‘‘அரசிடம் இருந்து இப்படித்தான் வருகிறது.

நாங்கள் என்ன செய்ய முடியும்’’ என்கின்றனர். கல், மண் கலந்து புழுத்துப்போன அரிசியை எப்படித்தான் சாப்பிடுவது? இதுகுறித்து எம்எல்ஏ, அதிகாரிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகளிடமும் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் நேரில் சென்றாலும் எம்எல்ஏவை பார்க்க முடிவதில்லை. எனவேதான், ஓட்டு கேட்டு வந்த அதிமுக எம்எல்ஏவிடம், இந்த அரிசியை எப்படி சாப்பிடுவது என்று காண்பிக்கவே அந்த அரிசியால் ஆரத்தி எடுத்தோம்’’’’ என்றனர். ஓட்டு கேட்க வந்த அதிமுக எம்எல்ஏவிடம் ரேஷன் அரிசி ஆரத்தி எடுத்த சம்பவம் அலங்காநல்லூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.

* ‘‘நாங்க போன் அடிச்சா நீங்க எடுக்க மாட்டீங்க...?’’
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம், எம்எல்ஏ மாணிக்கம், ‘‘இந்த கிராமத்திற்கு சாலை வசதி செய்துள்ளேன். முதியோர் உதவிதொகை வாங்கிக் கொடுத்துள்ளேன்’’ என சமாளித்து பார்த்தார். ஆனால் பொதுமக்கள் விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரச்னையை சமாளிக்க, ‘‘இது எனது செல்போன் எண். பிரச்னையை பேசுங்கள். நான் தீர்த்து வைக்கிறேன்’’ என்றார். அதற்கு ஒரு பெண், ‘‘நாங்க போன் பண்ணினா,  நீங்க எடுக்க மாட்டீங்களே ஐயா’’ என்றார். இதனால் தர்ம சங்கடத்தில் நெளிந்த எம்எல்ஏ, ‘‘நான் எம்எல்ஏவாக எனது பணியை சிறப்பாக செய்துள்ளேன். ரேஷன் விநியோகத்தை கூட்டுறவு நிர்வாகம்தான் சரி செய்ய வேண்டும். அதிகாரிகள்தான் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில்  நடந்து வருகின்றனர்’’ என்றார். மேலும், ஆரத்தி எடுக்க கட்சியினர் அழைத்து வந்த பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா 200 ரூபாயை தட்டில் வைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Aarti ,AIADMK MLA ,Cholavanthan Manikkam , Aarti to AIADMK MLA with cooked rice given to Cholavanthan Manikkam in 'massive' welcome ration: Siege
× RELATED கங்கையில் பால் ஊற்றி, ஆரத்தி எடுத்து...